புதுடில்லி: இந்தியர்கள் வேலைக்காக ஈரானுக்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சமீப காலமாக வேலை வாய்ப்புகள் தருவதாகக் கூறி பலரை மோசடி கும்பல்கள் ஏமாற்றி வருவதாகவும், அங்கு சென்ற பிறகு சிலர் கடத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என அரசு வலியுறுத்தியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் வேலை தேடுவதாகக் கூறி சில இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் ஏமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானுக்கு சென்றதும், அந்தக் கும்பல்கள் அவர்களை கடத்தி, குடும்பத்தினரிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும் அறிக்கை எச்சரிக்கிறது. குறிப்பாக ஈரான் அரசு சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே விசா இல்லாத நுழைவை அனுமதிக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அல்லது பிற காரணங்களுக்காக விசா இல்லாமல் நுழையலாம் என்று கூறுபவர்கள் குற்றவியல் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும். எனவே இத்தகைய வாக்குறுதிகளை நம்பி யாரும் ஈரானுக்கு செல்லக் கூடாது. தவறான வாக்குறுதி மற்றும் போலியான வேலை வாய்ப்பு சலுகைகள் மூலம் இந்தியர்களை ஏமாற்றும் முயற்சிகளில் சிக்காமல் இருக்க மிகுந்த கவனம் தேவைப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியர்கள் எந்த வெளிநாட்டு வாய்ப்பையும் ஏற்கும் முன் அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலமாக மட்டுமே செயல்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. தேவையான ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்வது கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவது மிக அவசியம் என அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.