ஐதராபாத்: ஆந்திராவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என, முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அமராவதி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அமராவதி நகர கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மீண்டும் கட்டுமான பணியை துவக்கி வைத்து சந்திரபாபு நாயுடு பேசினார். தேசிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1950-களில் 6.2 சதவீதமாக அதிகரித்தது. இந்த நிலையில், 2021-ல் இது 2.1 சதவீதமாக குறையும்.
ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தற்போது அதை விட குறைவாக 1.6 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் முதியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒரு குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பது இளம் பருவ மக்கள்தொகையில் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
இதை சரிசெய்ய, தம்பதிகள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற வேண்டும். அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இது ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள பெரிதும் ஊக்குவிக்கும்.
மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற முந்தைய சட்டத்தை ரத்து செய்துள்ளோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.