திருப்பதி: திருமலை கோவிலின் புனிதத்தை நிலைநாட்டுவதும், இங்கு ‘கோவிந்த நாமம்’ கோஷம் செய்வதும் மிகவும் முக்கியம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
திருப்பதி திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இன்று (அக்.5) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராம்நாராயண ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜே.ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வீரையா சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ”மலைக்கோயிலின் புனிதத்தை நிலைநாட்டுவது மிகவும் அவசியம். கோவில் அமைந்துள்ள மலை உச்சியில் ‘கோவிந்த நாமல்’ என்ற கோஷம் மட்டுமே கேட்க வேண்டும்.
ஆன்மிகச் சூழல் எந்தவித சமரசமும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும். அதிகரித்து வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய மேம்படுத்தப்பட்ட திட்டமிடல் தேவை.
தற்போது திருமலை வனப்பகுதியில் 72% காடுகளால் சூழப்பட்டுள்ளது. விரிவான வனப் பாதுகாப்பு மற்றும் விரிவாக்க முயற்சிகளுடன் அடுத்த ஐந்தாண்டுகளில் இதை குறைந்தபட்சம் 80% ஆக அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான முயற்சிகள் குறித்த அறிக்கைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும். பக்தர்களின் சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்தர்கள் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் இதுபோன்ற முறையை அதிகாரிகள் படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.
லட்டுகள் உள்ளிட்ட கோயில் பிரசாதங்களின் தரம் சீரானதாகவும் மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அவற்றைத் தயாரிக்க சிறந்த பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
திருமலையில் வளர்ந்து வரும் விஐபி கலாச்சாரம் தீவிர கவலையை எழுப்புகிறது. விஐபிகளுக்கு ஆன்மிக அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பக்தர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். பக்தர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது.
பக்தர்கள் மனநிறைவோடும் ஆன்மிக நிறைவோடும் வீடு திரும்ப வேண்டும். இதை திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்”
எனத் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது, திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் அமைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறையை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.