ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலின் மகா சிவராத்திரி பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் முறையாக பட்டு வஸ்திரங்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணிக்கையாக வழங்க உள்ளார். பஞ்சபூத கோவில்களின் வாயுத்தலமாக கருதப்படும் காளஹஸ்தி சிவன் கோவில், திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கண்ணப்ப நாயனாருக்கும் தனி ஆலயம் உள்ளது. இக்கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோத்ஸவ விழா வரும் 21-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடக்கிறது.

முதன்முறையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை மகாசிவராத்திரியான 25 அல்லது 26-ம் தேதி வழங்கவுள்ளனர். முதல்வர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.