திருமலை: ஆந்திர மாநில என்.டி.ஆர். விஜயவாடா மாவட்டத்தில் உள்ள தும்மலப்பள்ளி கலாக்ஷேத்திரத்தில் உலக பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். இதில் அவரை ஆதிவாசிகள் பாரம்பரிய உடைகள் அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆதிவாசிகள் அல்லூரி சீத்தாராமராஜ், ஏகலவ்யா ஆகியோரை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியை ஒழிக்க அல்லூரி சீதாராமராஜ் தன் உயிரை தியாகம் செய்தார். திரவுபதி முர்மு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி குடியரசுத் தலைவரானார். அவர் தனது படிப்படியான வளர்ச்சியை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக பழங்குடியினர் அதிகம் வாழும் நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன நிலையிலும், பழங்குடியினர் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். நீங்கள் எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஆதிவாசி தினம் கொண்டாடப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆதிவாசிகள் தைரியம், இயல்பான திறமை மற்றும் அறிவுத்திறன் கொண்டவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.