நிலவின் மேற்பரப்பில் இருந்து மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-4 விண்கலம் 2027-ல் ஏவப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சந்திரயான்-4 விண்கலம் 2027-ல் விண்ணில் ஏவப்படும்.
எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்தி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். விண்கலத்தின் 5 முக்கிய பாகங்கள் 2 ராக்கெட்டுகளில் தனித்தனியாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டு ஒன்றுகூடும். அதன் பிறகு, இந்த விண்கலம் நிலவுக்குச் செல்லும். நிலவின் மேற்பரப்பில் உள்ள பாறைத் துகள்கள் பூமிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு ககன்யான் திட்டம் தொடங்கப்படும். இதில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படுவார்கள்.

அதற்கு முன் ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ ரோபோ அனுப்பப்பட்டு சோதனை செய்யப்படும். இந்த ஆளில்லா விண்கலம் இந்த ஆண்டு ஏவப்படும். இந்தியாவும் அடுத்த ஆண்டு சுமத்ராயன் திட்டத்தை மேற்கொள்ளும். இதற்காக நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு 3 விஞ்ஞானிகள் அனுப்பி வைக்கப்பட்டு கடலுக்கு அடியில் ஆய்வு நடத்தப்படும். இந்த திட்டத்தை பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் மூலம் கடலில் உள்ள கனிமங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்படும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் உதவும். விண்வெளி ஆராய்ச்சிக்கான இஸ்ரோ மையம் 1969-ல் அமைக்கப்பட்டது. முதல் ஏவுதளத்தை அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது. 1993-ல் ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. இரண்டாவது ஏவுதளம் 2004-ல் அமைக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் பல விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடியில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த புதிய ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 44 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் தனியார் துறையினர் விண்வெளித் துறையில் நுழைந்து புதுமைகளை உருவாக்கியுள்ளனர். இது சர்வதேச முதலீடு மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்க வழிவகுத்தது. வரும் ஆண்டுகளில் இந்தியா இன்னும் பெரிய சாதனைகளை படைக்கும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.