மும்பை: ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி வழக்கமாக ரெப்போ விகிதம் தொடர்பான முடிவுகளை எடுக்கும். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு தனது ஆலோசனைக் கூட்டத்தை கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடரின் கடைசி மற்றும் 3-வது நாளான இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெப்போ வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பு 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் தற்போது 0.25 புள்ளிகள் குறைந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2023 வரை, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6 முறை மாற்றவில்லை மற்றும் முந்தைய 6.5 சதவீதத்தில் தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று கூறியுள்ளது. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதால் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக மே 2020-ல் ரெப்போ விகிதம் 40 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4% ஆக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.