தற்சார்பு பற்றி பேசும் போது அனைவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மேக் இன் இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு பற்றி பேசினால் மட்டும் போதாது.
இவை அனைத்தும் செயல்படுத்தப்பட வேண்டுமானால், நமக்குள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றார். மற்றவர்களை மாற்றிக் கொள்ளச் சொல்வது மிகவும் எளிது, ஆனால் அறிவுரை கூறும் முன், அதை தன்னிடமிருந்து தொடங்க வேண்டும் என்றார் நிதின் கட்கரி.
இன்றைய அரசியலில் ஜாதி, பணம், குற்றங்கள் நிறைந்திருப்பதாக குறிப்பிட்ட நிதின் கட்கரி, இவற்றை மாற்ற சத்ரபதி சிவாஜியின் நல்லாட்சி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, தோற்றாலும் சாதி அரசியலில் ஈடுபட மாட்டேன் என உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் கட்காரி கூறினார்.
மேக்-இன்-இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என்று பிரதமர் மோடி பேசும் போது, நிதின் கட்கரியின் பேச்சு பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்ததாக கருதப்படுகிறது. கட்காரி ஏற்கனவே மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்த நிலையில், அவர் மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்வது பாஜகவினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.