புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் போலி வாக்காளர்கள் அல்லது பிற மாநில வாக்காளர்கள் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்திய உள்துறைச் செயலர், சட்டப் பேரவைச் செயலர், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை (18-ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதில் உள்ள நடைமுறை சாத்தியங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் சகாரிகா கோஷ் கூறுகையில், ‘நகல் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முன்னதாக 3 அறிக்கைகளை வெளியிட்டது. தற்போது வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான தவறுகளை மறைக்கும் செயல்.’