புதுடில்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மூன்று தேர்தல் கமிஷனர்களும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் தேர்தல் கமிஷன் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த ஞானேஸ்குமார், அரசியலமைப்பின்படி 18 வயது ஆன குடிமகன்கள் அனைவரும் வாக்காளர்களாக மாறலாம், அனைத்து கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட பிறகே தேர்தலில் பங்கேற்க முடியும் என விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது, தேர்தல் கமிஷன் எந்தக் கட்சிக்கும் சார்பாக இல்லை, அனைவருக்கும் சமமாக உள்ளது. தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பூத் மட்ட அதிகாரிகள், வாக்காளர்கள், கட்சி முகவர்கள் அனைவரும் இணைந்து செயல்படுகின்றனர், அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றார்.
பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கான நகல்கள் கட்சிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அதில் உள்ள குறைகளை சரி செய்ய வாக்காளர்கள், கட்சிகள் பங்களிப்பு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.