ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க இந்திய ராணுவம் சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோக்களை களமிறக்கியுள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்த, பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள், அம்மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களை வேட்டையாட இந்திய ராணுவம் சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோக்களை களமிறக்கியுள்ளது.
காஷ்மீரில், உளவுத்துறை அமைப்பும் அதன் கட்டமைப்பை வலுப்படுத்தி, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் உள்கட்டமைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானின் மறைமுகப் போருக்கு பதிலடி கொடுக்க 4000 வீரர்களை ராணுவம் காஷ்மீருக்கு அழைத்து வந்தது. நவீன ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளுடன், பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை அழிக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.