கஜுராஹோ: மத்திய பிரதேசத்தில் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பை காங்கிரஸ் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் ரூ.44,605 கோடி மதிப்பீட்டில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் 2,000 கிராமங்களில் உள்ள 7.18 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடையும். 103 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரிய சக்தியும் உற்பத்தி செய்யப்படும். மத்தியப் பிரதேசத்தில் 10 மாவட்டங்களில் 44 லட்சம் பேருக்கும், உ.பி.யில் 21 லட்சம் பேருக்கும் குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் போது பிரதமர் மோடி பேசியதாவது:-
அம்பேத்கர் தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் நாட்டின் நீர்வள மேம்பாடு, அவற்றின் மேலாண்மை மற்றும் அணைகள் கட்டுவதில் பெரும் பங்கு வகித்துள்ளார். யூனியன் நீர் ஆணையம் மற்றும் முக்கிய நதி வடிநிலத் திட்டங்களின் உருவாக்கத்தில் அம்பேத்கர் பெரும் பங்கு வகித்துள்ளார். ஆனால், நாட்டில் தண்ணீர் சேமிப்பின் தேவை அதிகரித்து வருவதை காங்கிரஸ் ஒருபோதும் கவனத்தில் கொள்ளவில்லை.
அம்பேத்கரை நீர் பாதுகாவலராகப் புறக்கணித்து புறக்கணித்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய சவால் நீர் சேமிப்பு. முறையான மேலாண்மையுடன் போதுமான நீர் வளங்களைக் கொண்ட நாடுகள் மட்டுமே 21-ம் நூற்றாண்டில் முன்னேறும். முந்தைய காங்கிரஸ் அரசுகள் அடிக்கல் நாட்டி 35 முதல் 40 ஆண்டுகள் வரை திட்டங்களைத் தாமதப்படுத்தின. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நூற்றாண்டு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் மோடி வெளியிட்டார்.