மும்பை: நவராத்திரி விழா நாளை முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தித் தொடர்பாளர் ராஜ் நாயர் கூறியதாவது:- கர்பா நடனம் என்பது வெறும் நடன நிகழ்ச்சி அல்ல. இது கடவுளைப் பிரியப்படுத்துவதற்கான வழிபாட்டு நிகழ்வு.
முஸ்லிம்கள் சிலை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. இந்து சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே கர்பா நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். நடன நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பெயர்களை ஆதார் அட்டை மூலம் சரிபார்த்து, நெற்றியில் திலகமிட்டு பூஜைகள் செய்த பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்குமாறு விஎச்பி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவர் கூறுகையில், “விஎச்பி சமூகத்தில் நெருப்பை மூட்டி, அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக சமூகத்தை மத ரீதியாகப் பிரிக்க விரும்புகிறது. விஎச்பி சொல்வது புதியதல்ல. இந்த அமைப்பு நாட்டை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பிறந்தது.
“விஎச்பியின் நிலைப்பாடு நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடும் கூட” என்று அவர் கூறினார்.