புது டெல்லி: ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான மறைந்த மோரோபந்த் பிங்களேவின் புத்தக வெளியீட்டு விழா நேற்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய மோகன் பகவத், “நீங்கள் 75 வயதாகும் போது, நீங்கள் பதவி விலக வேண்டும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். மிகவும் நகைச்சுவையான மோரோபந்த் பிங்கேளே, ‘75 வயதுக்குப் பிறகு உங்களுக்கு ஒரு சால்வை வழங்கப்பட்டால், நீங்கள் பதவி விலக வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் வயதாகிவிட்டீர்கள்.
எனவே, நீங்கள் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.’ தேசிய சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், நீங்கள் 75 வயதாகும் போது, நீங்கள் தானாக முன்வந்து அந்தப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.” மோகன் பகவத்தின் உரையைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் ஊடகப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “விருதுகளைத் தேடும் ஏழை பிரதமருக்கு இது என்ன மாதிரியான செய்தி.

பிரதமர் மோடி நாடு திரும்பியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் அவருக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதை எட்டுவார் என்று நினைவூட்டினார். ஆனால் பிரதமர் அவருக்கு செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதை எட்டுவார் என்று பதிலளித்தார்! ஒரு அம்பு, இரண்டு இலக்குகள்!” என்று ஜெய்ராம் ரமேஷ் இதைப் பதிவிட்டு, செப்டம்பர் 11, 1950-ல் பிறந்த மோகன் பகவத்துக்கும் 75 வயதை எட்டவிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பாஜகவில் ஓய்வு பெறுவதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு இல்லை என்று 2023-ல் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா கூறியிருந்தார். “நரேந்திர மோடி 2029 வரை தலைமை தாங்குவார். அவர் ஓய்வு பெறப் போவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்றும் அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.