மணிப்பூர்: மணிப்பூர் தீப்பற்றி எரிவதற்கான குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். அனைத்து சமூதாயத்தினரும் அமைதி காக்க வேண்டும். மன்னிப்போம், மறப்போம் எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்ட ஓரிரு நாளிலேயே புதிய வன்முறை வெடித்தது.
நேற்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை ஒரு கும்பல் தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிப்பூர் தீப்பற்றி எரிவதற்கான குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் கார்கே வெளியிட்டுளள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. மணிப்பூரை எரித்த தீக்குச்சியாகும். நரேந்திர மோடி ஜி, நீங்கள் கடைசியாக 2022 ஜனவரியில் வாக்கு சேகரிப்பதற்கான மணிப்பூர் சென்றீர்கள். 2023 மே 3-ந்தேதியில் இருந்து வன்முறை தொடங்கியது.
600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். செயற்கைக்கோள் படங்கள் மூலம் மீடியாக்கள், கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன. உங்களுடைய திறமையற்ற மற்றும் வெட்கமற்ற முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் மாநிலத்திற்கு செல்லாததை வெட்கமின்றி வசதியாக மறைத்துவிட்டார்.
அழகான எல்லை மாநிலமான மணிப்பூர் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜக சுயநல ஆர்வம் கொண்டுள்ளது என்பதை மீண்டும் தெரிவிக்கிறோம். நூற்றுக்கணக்கானோர் உயிரழிந்த நிலையில், 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 20 மாதங்களாக முகாம்களில் மக்கள் இன்றும் வசித்து வருகின்றனர்.
டிசம்பர் 6-ந்தேதி இந்தியா கூட்டணி மணிப்பூர் வன்முறை தொடர்பாக மூன்று முக்கிய மற்றும் எளிதான கோரிக்கைகளை வதை்தது. இந்த மூன்றில் ஒன்றை கூட நீங்கள் செய்யவில்லை. இதனால் ராஜ்தர்மத்தை பின்பற்றாத பிரதமர் மோடி அரசியலமைப்பு குற்றத்தில் இருந்த தப்ப முடியாது.
டிசம்பர் 31-ந்தேதி சைபோலக கிராமத்தில் பெண்கள் மீது பாதுகாப்புப்படையினர் தடியடி நடத்தியதாக குகி அமைப்புகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.