திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் அவ்வப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கும் சசி தரூர் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர் கூறியதாவது:-
4-வது எதிர்க்கட்சி தலைவர் என்பதால், மத்திய அரசு என்ன செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. கட்சிக்காக மட்டும் எப்போதும் பேச முடியாது. பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பை பாராட்டியது சரிதான். இந்திய நலன் கருதிதான் பாராட்டினேன். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இந்தியர்களுக்கு சில சாதகமான விஷயங்களை கொண்டு வந்துள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு சந்திக்கும் 4-வது தலைவர் பிரதமர் மோடி ஆவார். இது உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. அதே நேரத்தில் மோடியின் அமெரிக்க பயணம் குறித்தும் சில கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறி இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுகின்றனர். இது குறித்து அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி பேசியதாக தெரியவில்லை. எனினும், வர்த்தகம், வரி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்த 9 மாதங்களுக்கு நிறுத்திவைக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் வகையில் அமெரிக்கா தன்னிச்சையாக வரிகளை உயர்த்துவதை விட இந்த காலகட்டம் மிக நீண்டது.
என்னைப் பொறுத்த வரையில் பிரதமரின் அமெரிக்கப் பயணம் சில விஷயங்களில் இந்தியாவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. ஒரு இந்தியனாக நான் அதை பாராட்டுகிறேன். கட்சிக்காக நான் எப்போதும் பேச முடியாது. நான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அல்ல. மத்திய அரசு செய்வதை எல்லாம் தவறு என எதிர்க்கட்சிகள் நினைப்பதும், எதிர்க்கட்சிகள் செய்வதை எல்லாம் தவறு என மத்திய அரசு நினைப்பதும் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். ஜனநாயகத்தில் ஒருவர் மற்றவருக்கு அடிபணிய வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.