பெங்களூரு: கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதா சுவாமி கோவிலைச் சுற்றி பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான சதி குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. முன்னாள் தூய்மை பணியாளர் சின்னையா, பல பெண்களின் உடல்கள் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். விசாரணையில் எந்த ஆதாரமும் இல்லாததால், அவர் பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக கைது செய்யப்பட்டார்.

இந்தச் சூழலில், தமிழக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும், கைது செய்யப்பட்ட சின்னையாவுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி குற்றஞ்சாட்டினார். “கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் சதி திட்டத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, சசிகாந்த் செந்தில், ஜனார்த்தன ரெட்டியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில் பரப்பப்பட்டது என்றும் கூறி, பெங்களூரு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு செப்டம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வரும்.
செந்தில் கூறியதாவது: “நான் தமிழர் என்பதாலும், முன்னாள் கலெக்டராக தட்சிண கன்னடாவில் பணியாற்றியதாலும், என்னை குறிவைத்து இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. இனி யாரேனும் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
சசிகாந்த் செந்தில், 2009 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. பல்லாரி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியவர். பின்னர் ராஜினாமா செய்து 2020ல் காங்கிரசில் இணைந்து, கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.