ஹைதராபாத்: முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு முதல்வருக்கு அளிக்கும் மரியாதையை வழங்கியதால் தெலுங்கானா அரசு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் திருப்பதி ரெட்டி விகாராபாத் மாவட்டத்தில் நடந்த ஒரு பள்ளி விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அவருக்கு ஒரு முதல்வரைப் போல நீண்ட போலீஸ் கான்வாய் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியின் சார்பாக மாணவர்கள் மேளதாளங்களுடன் மினி அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், எதிர்க்கட்சிகளான பாரத ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) மற்றும் பாஜக இதை கடுமையாக கண்டித்துள்ளன.
பிஆர்எஸ் நிர்வாகி கே.டி. ராமராவ் கூறியதாவது: “தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, முதல்வர்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஒரு முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அரை டஜன் முதல்வர்கள் உள்ளனர். விகாராபாத் முதல்வர் திருப்பதி ரெட்டிக்கு எனது வாழ்த்துக்கள்,” என்று அவர் கூறியிருந்தார்.
இதேபோல், தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் என்.வி. சுபாஷ் கூறுகையில், “எம்.பி., எம்.எல்.ஏ. கூட இல்லாத திருப்பதி ரெட்டிக்கு போலீஸ் கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளி நிகழ்ச்சியின் போது, விகாராபாத் மாவட்ட ஆட்சியர் ‘தனிப்பட்ட பாதுகாவலர்’ போல செயல்பட்டார்,” என்றார்.