பெங்களூரு:பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் ஆட்சியின் போது, கர்நாடகா மாநில அரசு கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதி ஒதுக்கீடு செய்தது. மொத்தம் ரூ.13,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, கொரோனா நிதியில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், சில செலவுக் கோப்புகள் காணாமல் போனதாகவும் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் 13 அன்று விதான சவுதா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராமுலு, பாஜக எம்பி சுதாகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா நிதி மோசடி தொடர்பாக சிஐடி காவல் கண்காணிப்பாளர் ராகவேந்திர ஹெக்டே தலைமையிலான குழு விசாரணை நடத்தும். இந்த வழக்கை ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) வழக்கு மற்றும் பழங்குடியினர் நல வாரிய ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தற்போது முந்தைய பாஜக அரசின் கொரோனா நிதி மோசடியை தீவிரப்படுத்தி வருகிறது. அதனால், காங்., – பா.ஜ., இடையே மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.