சீனாவில் 2019ல் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. இந்தியாவில் 2020ல் தொடங்கிய பரவலுக்கு பின்னர் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. நோயின் பரவல் வேகமாக இருந்ததால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, சுவாசக் கோளாறு போன்ற சிக்கல்கள் பெருமளவில் ஏற்பட்டன.

கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. 2022க்குப் பிறகு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். ஆனால் தற்போது, கொரோனா தொற்று மீண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. தற்போது 4302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் 1373 பேருக்கும் தமிழகத்தில் 216 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். இதையடுத்து மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இருமல் மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பொது இடங்களில் செல்ல வேண்டாம் என்றும், உடல்நிலை மோசமடையும் பட்சத்தில் மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வதந்திகளை தவிர்த்து மத்திய அரசின் அறிவிப்புகளையே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் தகவலின்படி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது வீரியம் குறைந்த கொரோனாதான் என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், தற்போது முகக்கவசம் கட்டாயமல்ல என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். எனினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையை கடைப்பிடித்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.