பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கமான கபினி அணையில் விரிசல்கள் மற்றும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மைசூரு மாவட்டம் ஹெச்.டி. கோட்டே தாலுகாவில் அமைந்துள்ள இந்த அணை, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கும் உயிர் நாடியாக செயல்பட்டு வருகிறது. தற்போது அணையின் சில பகுதிகளில் கற்கள் இடையே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதை வல்லுநர்கள் கவலைக்குரிய விஷயமாகக் கூறியுள்ளனர்.

அணையின் நிலையை ஆய்வு செய்த காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் அதிகாரிகள், தனித்தகவல் அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில், அணையை முழுமையாக பராமரிக்க ரூ.32.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவை இதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. ஆனால், திட்டமிடப்பட்ட பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் கனமழை பெய்திருப்பதால், கபினி அணை முழுமையாக நிரம்பியுள்ளது. உபரி நீர் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. அத்துடன், அணை நிரம்பிய நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாததால், இப்போது பணிகளை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் குறையும் நேரத்தைக் கணக்கிட்டபின், அவசர பராமரிப்பு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பாதுகாப்பு கட்டமைப்பின் நோக்கில் இத்தகைய பழுதுகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளதால், அதிகாரிகளும் வல்லுநர்களும் இந்த பிரச்சினையை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.