கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மீது நடைபெற்ற வழக்கமான ரத்தப் பரிசோதனையில் ‘ORH பாசிட்டிவ்’ என கண்டறியப்பட்டது. ஆனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் இயல்புக்கு மாறாக வினைபுரிந்து வருவதை டி.டி.கே ரத்த மையத்தினர் கவனித்தனர். இது மருத்துவ வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவருடைய ரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு பத்து மாதங்கள் நீடித்த ஆய்வுகளுக்குப் பின் அதில் ‘குரோமர் ஆன்டிஜென்’ எனும் ஒரு புதிய ஆன்டிஜென் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆன்டிஜன் உலகில் இதுவரை யாரிடமும் காணப்படாத வகையானது என்பதால், அந்த ரத்த வகையை அதிகாரப்பூர்வமாக ‘CRIB’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில் “CR” என்பது குரோமரை குறிக்கின்றது, “IB” என்பது இந்தியா மற்றும் பெங்களூருவைக் குறிக்கிறது.
இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகுக்கு புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ரத்த வகைகள் பரிசோதனைகளில் மேலும் அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உலகளவில் மட்டுமல்லாமல், இந்திய மருத்துவ சமூகத்திலும் இது பெரும் அசைவையும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்த மாதிரியான அபூர்வமான ரத்த வகைகளை அடையாளம் காண்பதும், மனித உடலியல் குறித்து புதிதாக அறிந்து கொள்வதும் மருத்துவத் துறையில் மிகவும் முக்கியமானது. இந்த பெண்ணின் ரத்தம் உலகில் தனிப்பட்டது என்பதோடு, அறிவியல் ஆராய்ச்சிக்கான முக்கிய ஆதாரமாகவும் இருக்கக்கூடும்.