லண்டன்: ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்கள் இணைய தாக்குதலால் சிக்கியுள்ளன. லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதலால் சேவைகள் முற்றிலும் முடங்கின. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களுக்கு தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின் காரணமாக விமானங்கள் புறப்படுவது, தரையிறங்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன. பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: “சைபர் தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதை கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் மீண்டும் சேவைகள் இயல்புநிலைக்கு வரும்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையம் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையம் எந்தவித பாதிப்புமின்றி இயல்பாக செயல்பட்டு வருகின்றன என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் விமான நிலையங்களில் நடந்த இந்த தாக்குதல், சர்வதேச விமானப் போக்குவரத்து பாதுகாப்பை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.