அகமதாபாத்: குஜராத்தின் காந்திநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘உங்கள் பணம், உங்கள் உரிமைகள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள வங்கிகள், ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், வருங்கால வைப்பு நிதி கணக்குகள் மற்றும் பிற நிறுவனங்களில் நீண்ட காலமாக ரூ.1.84 லட்சம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது என்றார்.
இந்தத் தொகை அரசாங்கத்தின் சொத்து அல்ல, அது தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் திருப்பித் தர வேண்டும். மக்கள் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாத பணத்தைத் திரும்பக் கோரி வருகின்றனர். இது அவர்களின் பணம். முறையான ஆவணங்கள் இல்லாதது, மறக்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கைகள் அல்லது விழிப்புணர்வு இல்லாததால் உரிமை கோரப்படாத தொகை அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உரிமை கோரப்படாத பணத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தரும் நோக்கில், ‘உங்கள் பணம், உங்கள் உரிமைகள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு நடைபெறும் இந்த பிரச்சாரம், விழிப்புணர்வு, அணுகல் மற்றும் செயல்பாடு ஆகிய 3 தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த பிரச்சாரத்தின் நோக்கம், கோரப்படாத பணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ரிசர்வ் வங்கியின் யுடிஜிஎம் தளத்தின் மூலம் கோரப்படாத பணத்தைத் தேடுவதற்கான வழியை வழங்குவது மற்றும் அதிகாரிகள் ஏதேனும் காரணத்தைக் குறிப்பிட்டாலும், பணத்தை சரியான உரிமையாளர்களிடம் திருப்பித் தர முன்வரச் செய்வது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.