டெல்லி முதல்வரைத் தேர்ந்தெடுக்க இன்று நடைபெறவிருந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில், 70 இடங்களில் 48 இடங்களின் அறுதிப் பெரும்பான்மையுடன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் தொடர்கிறது.
இந்த நிலையில், முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 20 ஆம் தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், முதல்வர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா பாஜக எம்பி. மனோஜ் திவாரிக்கும் மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, விஜேந்தர் குப்தா மற்றும் ரமேஷ் பிதுரி ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.