புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வருக்கு எதிரான மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வீடியோ மூலம் டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அவரது காவலை செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.முன்னதாக, புதிய மதுக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது. அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கை எதிர்த்து ஜூன் 20-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஜூன் 21ஆம் தேதி ரத்து செய்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். பின்னர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ ஜூன் 26 அன்று கைது செய்தது. பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜூலை 11 அன்று ஜாமீன் வழங்கியது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை செப்டம்பர் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை ஆதரித்த சிபிஐ, மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் ஒய்வு மற்றும் ஒத்துழையாமையால் அவரைக் காவலில் வைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.