ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உலக முதலீட்டு மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றின் வளர்ச்சி தெளிவாக தெரிகிறது. இன்றைய உலகிற்கு மிகவும் நெருக்கடியான காலங்களிலும் வலுவாக செயல்படக்கூடிய பொருளாதாரம் தேவை.
இதற்கு, இந்தியாவுக்கு மிகப்பெரிய உற்பத்தித் தளம் தேவை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் ஒவ்வொரு துறையும் பலனடைந்துள்ளது என்பதை இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்தை இளைஞர் சக்தி முன்னெடுத்துச் செல்கிறது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்தில் எங்கள் அரசு செயல்படுகிறது.
இதன் மூலம் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்று வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவான அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்கோ பாரம்பரியத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்காததால் ராஜஸ்தான் இழப்புகளைச் சந்தித்தது. தற்போது ராஜஸ்தான் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டுமல்ல, நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. அனைத்தையும் ஏற்று, காலத்திற்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ள ராஜஸ்தானுக்கு தெரியும் என பிரதமர் மோடி கூறினார்.