பிரயாக்ராஜ்: வட இந்தியாவில் இன்று மௌனி அமாவாசை என்பதால், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. “புனித நீராடல் சங்கம் காட் பகுதிக்கு அருகே உள்ள தடுப்புச்சுவர் உடைந்ததில் சில பக்தர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பற்றிய சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கும்பமேளாவின் சிறப்பு அதிகாரி அகன்க்ஷா ராணா கூறினார். இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை மௌனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று நடைபெறும் மகா கும்பமேளாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், அமிர்த கால ஸ்தானம் (புனித ஸ்நானம்) மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. 2 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘திரிவேணி யோகம்’ எனப்படும் வானியல் தினமான இன்று, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர். கும்பமேளாவில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் பிற உபாதைகள் இருந்ததாக கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் தினமும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடு முழுவதும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிரயாக்ராஜ் ரயில் நிலையத்திற்கு அருகில் 7 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி உடனடியாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டார். நெரிசல் மிகுந்த பகுதியில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டது.