திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான சிறப்பு பூஜைகள், உற்சவம், தரிசனம் நடக்கிறது. அதன்படி, ஆண்டுதோறும் புனித திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பவித்ரா உற்சவம் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
அதன்படி, 3 நாட்கள் கோயில் சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்று, மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
15ம் தேதி புனித மாலை சாத்துதல், 16ம் தேதி மாலை சாற்றுதல், 17ம் தேதி பூர்ணாஹுதியுடன் யாகம் நிறைவடையும். இதை முன்னிட்டு, 14ம் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. 14ம் தேதி சஹஸ்ர தீப அலங்கார சேவை, 15ம் தேதி திருப்பாவடை சேவை, 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்கித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீப சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.