கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த இளநிலை மருத்துவர்கள், மாணவியின் கொடூரத்திற்கு நீதி கோரி மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் இளநிலை மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல மூத்த மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஜூனியர் மருத்துவர்களுக்கு ஆதரவாக ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் சுமார் 50 மூத்த மருத்துவர்கள் செவ்வாயன்று ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். பின்னர், மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், மாநில செயற்குழுவுடன் ஸ்வஸ்த்யா பவனில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து, போராட்டம் நடத்தும் ஜூனியர் டாக்டர்கள் குழுவை அழைத்தார்.
இந்த கூட்டத்தில் 29 இளநிலை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், போராட்டம் நடத்திய ஜூனியர் டாக்டர்களுக்கும், அரசுக்கும் இடையே சுமுக தீர்வு ஏற்படவில்லை. ஆர்ஜி கார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு வரை மொத்தம் 106 மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், ஜல்பைகுரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த 19 மருத்துவர்களும், சிலிகுரியின் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த 42 மருத்துவர்களும், கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த 35 மருத்துவர்களும், கல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 70 மருத்துவர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இது மாநில அரசுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஜூனியர் டாக்டர்களின் போராட்டம் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இளநிலை டாக்டர்களின் கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தை முடிவடையாததால், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.