
சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார் படாபரா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தது. மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை நாய் அசுத்தம் செய்ததாக தெரியவந்தது. ஜூலை 28ஆம் தேதி வழங்கப்பட்ட இந்த உணவை 84 மாணவர்கள் சாப்பிட்டது வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சம்பவம் வெளிப்படிந்தவுடன், பெற்றோர்களும் உள்ளூர்வாசிகளும் கல்வித் துறையின் அலட்சியத்தை கடுமையாக கண்டித்தனர்.

அரசு சார்பில் கூறப்பட்ட தகவலின்படி, உணவு சுயஉதவி குழுவின் மூலம் வழங்கப்பட்டது. இதற்குப் பொறுப்பான பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உணவு விநியோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பவத்திற்கு பிறகு மாணவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். மூன்று தவணைகளில் மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மாணவர்களின் நலனில் அரசு அலட்சியம் காட்டியதை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது. இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது எனவும் அரசு கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பெற்றோர்களுக்கு சிறிதளவு நிம்மதி அளித்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் கல்வித் துறையின் பொறுப்பின்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு புறக்கணிக்கப்படக்கூடாது என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.