மாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் காரணமாக, தமிழ்நாடு எம்.பி. கனிமொழி கருணாநிதி பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்த பரபரப்பு நிலை ஏற்பட்டது. கடந்த மே 7ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் அதனது ஆக்கிரமிப்பு பகுதியில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில், உலக நாடுகளுக்கு இந்தியாவின் நிலைபாட்டை விளக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு குழுவின் தலைவராக கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டார். இதன்படி அவர் தலைமையிலான குழுவினர் நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர்.
இந்த பயணத்தின்போது, மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடந்தது. அதன் விளைவாக விமான சேவைகள் சில நேரம் நிறுத்தப்பட்டன. இதனால், கனிமொழி எம்.பி பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் சுழன்று கொண்டிருந்தது. நிலைமை கட்டுப்பட்ட பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பின்னர் குழுவினர் மாஸ்கோவில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று தங்கினர். இக்குழு இன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தொடர்ந்து லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த குழு பயணிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த பயணத்தின் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் சட்டப்பூர்வ நிலைப்பாட்டை சர்வதேச அளவில் விளக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். தற்போது ரஷ்யாவில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த பயணம் மேலும் கவனத்துக்கு வந்துள்ளது.