வயநாடு: கேரளாவில் மூளையைத் தாக்கும் ஆபத்தான அமீபிக் மூளைக்காய்ச்சல் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வயநாட்டைச் சேர்ந்த ரதேஷ் (45) என்ற நபர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 20 நாட்களாக காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற கடுமையான அறிகுறிகளால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதய பாதிப்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்தால், இந்த மாதம் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்கு என உயர்ந்துள்ளது.

மாசுபட்ட நீரில் வாழும் அமீபா மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து திசுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. ஆற்றுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிப்பது அல்லது முகம் கழுவுவது மூலமாகவே தொற்று பரவுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் 11 பேர் இதே போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து, சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.