மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைப்பக்கம் ஹேக்கர்களால் தாக்கப்பட்டு சில நேரம் செயலிழந்தது. பொதுவாக சமூக வலைதளங்களில் மிகச் சுறுசுறுப்பாக செயல்படும் அவர், தனது கருத்துகளை மக்கள் மத்தியில் பகிர்ந்து வந்தார். ஆனால் இன்று காலை அவரது எக்ஸ் பக்கம் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள், பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாட்டின் கொடிகளை வெளியிட்டு அத்துமீறினர். நேரலையாக அந்த நாடுகளின் படங்களை வெளியிட்டு தங்களின் கைவரிசையை வெளிப்படுத்தினர். இதனால் சில மணி நேரங்களுக்கு அவரது பக்கம் அணுக முடியாத நிலையிலிருந்தது.
சம்பவத்தை அறிந்த உடனே, துணை முதல்வரின் அலுவலகம் சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வழங்கியது. தொழில்நுட்ப நிபுணர்கள் துரித நடவடிக்கை எடுத்ததால், கணக்கு மீண்டும் பாதுகாப்பாக மாற்றப்பட்டு வழக்கம்போல் இயங்கத் தொடங்கியது. அதிகாரிகள், தற்போது எந்தவித ஆபத்தும் இல்லை என உறுதியளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதள பயனாளர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. டிஜிட்டல் உலகில் கூட, உயர்நிலை அரசியல்வாதிகளின் கணக்குகள் இவ்வாறு தாக்கப்படுவதால், சைபர் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.