நைண்டி ஒன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ‘எக்ஸ்.இ’ (XE Series) என்ற பெயரில் வெளியான இந்த புதிய மாடல், குறைந்த விலையில் அதிக செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சியை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய மாடல்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நைண்டி ஒன் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆல்பாவெக்டர் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 500 நகரங்களில் 1,000-க்கும் அதிகமான விற்பனை மையங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை உலகளவில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மாடல்களுக்கு இணையாக புதிய எக்ஸ்.இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலில் பயணிக்க வெறும் 15 பைசா/km மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள், BLDC மோட்டார், அதிக திறன் கொண்ட பேட்டரி, விரைவாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இது பயணத்தை சவுகரியமாக மாற்றும் வகையில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ளது.
லித்தியம்-இரும்பு பேட்டரி முற்றுமாக சார்ஜ் செய்யப்பட்டால், அதிகபட்சமாக 80 கிமீ வரை பயணிக்கலாம். இதில் ஈய அமில பேட்டரி (Lead Acid Battery) மாற்றாகவும் கிடைக்கிறது. லித்தியம்-இரும்பு பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம், ஈய அமில பேட்டரிக்கு 1 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டர் குறை-வேக மாடலாக உருவாக்கப்பட்டதால், அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.27,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 7-8 மணி நேரம் எடுக்கலாம்.
நைண்டி ஒன் எக்ஸ்.இ மாடல் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்பதால், இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகரப்புறங்களில் குறைந்த செலவில் எளிதாக இயக்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனமாக இது பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.