புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) பெயரை மாற்றுவது குறித்த பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தின் பெயரை ஹரிகார் பல்கலைக்கழகம் என்று மாற்ற மத்திய அமைச்சர் தாக்கூர் ரகுராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
1857-ம் ஆண்டு உ.பி.யின் மீரட்டில் நடந்த சிப்பாய் கலகத்தின் விளைவாக ஆங்கிலோ முகமதியன் ஓரியண்டல் கல்லூரி உருவாக்கப்பட்டது. 1875-ம் ஆண்டு சர் சையத் அகமது கானால் நிறுவப்பட்ட இந்த கல்லூரி இப்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இந்த பண்டைய பல்கலைக்கழகம் மத்திய அரசின் அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.

முஸ்லிம்கள் இந்து மாணவர்களை விட அதிகமாகப் படிப்பதால், இது சிறுபான்மை அடையாளத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, சில நேரங்களில் பல்கலைக்கழகம் குறித்து சர்ச்சைகள் எழுகின்றன. AMU இதுபோன்ற சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றது. இப்போது அதில் முஸ்லிம் என்ற பெயரை மாற்றுவது குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து, உத்தரப்பிரதேச அமைச்சரவை அமைச்சர் ரகுராஜ் சிங் அலிகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிலம் இந்திய அரசுக்கு சொந்தமானது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் நிதி செலவிடப்படுகிறது.
எனவே, இது எந்த குறிப்பிட்ட மதம் அல்லது சாதி அடையாளத்துடனும் தொடர்புபடுத்தப்பட முடியாது. எனவே, அதன் பெயரை மாற்ற வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அலிகரின் மண் பாபா மற்றும் புனித ஹரிதாஸுடன் தொடர்புடையது. எனவே, பல்கலைக்கழகத்தின் பெயரை ‘ஹரிகர் பல்கலைக்கழகம்’ என்று மாற்ற வேண்டும். அனைத்து வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதன் மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அரசியலமைப்பு ரீதியாக இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுகிறார்கள். இதேபோல், அலிகர் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் இடஒதுக்கீட்டைப் பெற வேண்டும்’ என்று அவர் கூறினார். இதேபோல், அலிகர் நகரத்தின் பெயரை ‘ஹரிகர்’ என்று மாற்ற வேண்டும் என்று பாஜகவும் இந்துத்துவாவும் தொடர்ந்து கோரி வருகின்றன. சுமார் 40,000 மாணவர்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர்.
இதில், 3,500 பேராசிரியர்களும் 5,000 அதிகாரிகளும் பணிபுரிகின்றனர். இதில், பள்ளிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஐடிஐ, பாலிடெக்னிக், மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. உ.பி. அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கு மூலம் இதன் மீதான சிறுபான்மை அந்தஸ்து நீக்கப்பட்டது. இது குறித்த மேல்முறையீட்டு வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.