பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (முடா) அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
தகவலறிந்த வட்டாரங்களின்படி, “மைசூரில் உள்ள முடா அலுவலகம் மற்றும் சில இடங்களில் மத்திய துணை ராணுவ சிஆர்பிஎஃப் வீரர்கள் உதவியுடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இருப்பினும், முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த தடை இல்லை. மைசூர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தேவையான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றலாம்,” என்றனர். சில வாரங்களுக்கு முன்பு, லோக் ஆயுக்தாவின் சமீபத்திய வழக்கு (எஃப்ஐஆர்) தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் தனது அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (இசிஐஆர்) தாக்கல் செய்தது.
சித்தராமையா தனது மனைவிக்கு முடா மூலம் 14 இடங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய இரண்டு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூர் நகர்ப்புற வளர்ச்சி கழகம் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தியது. பார்வதியின் வேண்டுகோளின்படி, கடந்த ஆண்டு மைசூரில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
அவரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பை விட, பதிலாக கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருந்ததால் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ரூ.3000 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி விலை உயர்ந்த இடத்தை ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளான பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, முதல்வரின் மனைவி பார்வதி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை மூடாவிடம் ஒப்படைத்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் சித்தராமையா, தானும் தனது குடும்பத்தினரும் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் தம்மை கண்டு அஞ்சுவதாகவும் கூறியுள்ளார்.
இது தனக்கு எதிரான முதலாவது அரசியல் வழக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, மூடா தலைவர் கே.மாரிகவுடா தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தனது பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார்.