புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்க இயக்குனரகம் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 1937-ல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுமார் 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்து நிதி பெற்று, பங்குதாரர்களாக சேர்த்து ரூ.5 லட்சம் முதலீட்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்தை உருவாக்கினார்.
2010 வரை, AJL 1,057 பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. எனவே, இந்த நிறுவனம் எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன் மற்றும் உருதுவில் குவாமி அவாஸ் ஆகிய நாளிதழ்கள் 2008 வரை AJL இன் கீழ் வெளியிடப்பட்டன. அதன் பிறகு, நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து திவாலானது. இந்நிறுவனம் டெல்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா மற்றும் பஞ்ச்குளத்தில் ரூ. 5000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. செய்தித்தாள்களை மீண்டும் தொடங்க நிறுவனம் வட்டியில்லா கடனாக காங்கிரஸ் கட்சி ரூ. 90.25 கோடி கடன் பெற்றது. ஆனால், இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ராகுல் காந்தி இயக்குனராக ரூ.5 லட்சம் முதலீட்டில் ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.

அதன் இயக்குனர்களில் ஒருவராக சோனியா காந்தியும் சேர்ந்தார். இந்நிறுவனத்தின் 76% பங்குகளை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வைத்துள்ளனர். மீதமுள்ள 24% பங்குகளை காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோர் வைத்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஏ.ஜே.எல் நிறுவனம் பெற்ற ரூ.90 கோடி கடன் மற்றும் அதன் பங்குகளை யங் இந்தியனுக்கு மாற்ற 2011-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2016-ல் நடைபெற்ற கூட்டத்தில் AJL அதன் செய்தித்தாள்களை மறுபிரசுரம் செய்ய முடிவு செய்தது. AJL பங்குகளை யங் இந்தியனுக்கு மாற்றுவது குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அதன் பங்குதாரர்கள் குற்றம் சாட்டினர். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மற்றும் அலகாபாத் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆகியோரும் AJL இன் முக்கிய பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.5,000 கோடி சொத்துக்கள் மற்றும் பங்குகள் கொண்ட பொதுத்துறை நிறுவனமான ஏஜேஎல், ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாகவும், இதில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிதி முறைகேடு செய்ததாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் நிதி மோசடி நடந்துள்ளதா என அமலாக்க இயக்குனரகம் கடந்த 2014-ம் ஆண்டு விசாரணையை தொடங்கியது. மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய சோனியா, ராகுல் ஆகியோரின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் 2015-ல் தள்ளுபடி செய்தது.
அதன்பிறகு, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் 2016-ல் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அமலாக்க இயக்குனரகம் 2023 நவம்பரில் ரூ.751.9 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது அமலாக்க இயக்குனரகம் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஏஜேஎல் நிதி மோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.