புதுடில்லி: மத்திய அரசின் நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய திட்டமாக ‘இ-ஆபீஸ்’ உள்ளது. ஆரம்பத்தில் வெறும் சில அமைச்சகங்களில் பரிசோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்த இத்திட்டம், தற்போது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. காகித பைல்கள் இல்லாமல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் வழியே பைல்களை பரிமாறவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

2014ல் நரேந்திர மோடி பிரதமராகவந்த பிறகு, இந்த திட்டம் வேகமாக முன்னேறியது. 2019 ஆம் ஆண்டு வரையில் மத்திய அமைச்சகங்களின் 95 சதவீத பைல்கள் இ-ஆபீஸ் மூலம் பரிமாறப்பட்டன. 2024க்குப் பிறகு இது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இப்போது ஒரு அதிகாரி அல்லது அமைச்சர் பைலை நிலுவையில் வைத்திருந்தால், அது உடனே கேபினட் செயலரின் கண்களில் படும் வகையில் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரே நேரடியாக பைல்களின் நிலையை ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில் சில அமைச்சர்கள் முக்கியமான பைல்களை பல மாதங்களாக நிலுவையில் வைத்திருக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஒரு மாநிலத்திற்கு நிதி வழங்கும் பைல் ஆறு மாதங்களாக ஒரு அமைச்சரிடம் தங்கி இருப்பது, மற்றும் 12 முக்கிய திட்டங்கள் தொடர்பான பைல்கள் மூன்று மாதங்களாக மற்றொரு அமைச்சரிடம் இழுத்தடிக்கப்படுவது போன்ற தகவல்கள் பிரதமருக்கு சென்றுள்ளன. இதனால் மோடி கடும் கோபத்தில், “இனி இரண்டு மாதங்களுக்கு மேல் பைல் தாமதமானால் நடவடிக்கை உறுதி” என எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எச்சரிக்கையை மத்திய அரசு வெறும் வார்த்தைகளாக அல்லாது, உத்தியோகபூர்வ உத்தரவாகவும் செயல்படுத்தியுள்ளது. கேபினட் செயலர், பிரதமரின் அறிவுறுத்தலின்படி அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறான கண்காணிப்பு முறைகள், அரசின் திட்டங்கள் நேரத்துக்கு நிறைவேறவும், பொது மக்களுக்கு விரைவாக சேவைகள் வழங்கவும் உதவுமென நம்பப்படுகிறது.