‘புவி வெப்பமயமாதலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எதிர்கால ஆபத்தை உணர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் வருங்கால சந்ததியினருக்கு செய்யும் பெரும் அநீதி’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கஸ்தூரி ரங்கன் கமிட்டி எச்சரித்தது.
சுற்றுச்சூழல் பகுதி
கஸ்தூரி ரங்கன் அறிக்கையின்படி, கர்நாடகாவில் 20,668 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பாதுகாக்கப்பட வேண்டிய சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், அரசு அக்கறை காட்டவில்லை.
இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், கொடாக்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுக்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பட்டியலிட்டனர். இதில் அரசோ, மக்கள் பிரதிநிதிகளோ அக்கறை காட்டவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன.
வயநாட்டில் நிலச்சரிவு சம்பவம் கர்நாடகாவுக்கு ஒரு பாடம். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும். மற்ற இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் மேற்கு தொடர்ச்சி மலையில் அழுத்தம் குறையும். பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் வயநாட்டில் நடந்த சம்பவங்கள் கர்நாடகத்திலும் நடக்கும்.
குடிநீர் பிரச்னை உள்ளது
மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்றாவிட்டால், குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறியதாவது:
விபத்துகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு சாலை விரிவாக்கமே முக்கிய காரணம். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொதுப்பணித்துறையினர் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதுகுறித்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் என்ன இருக்கிறது? மேற்கு தொடர்ச்சி மலையை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முதல்வர் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.