புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிராவை போல ஏமாற்றி மேற்கு வங்கத்திலும் பாஜக வெற்றி பெற முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (2-ம் தேதி) தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்த நிலையில், ”வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டாலும், தொகுதி மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் வித்தியாசமாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மட்டுமே வாக்குப்பதிவு செய்ய முடியும்.
எனவே, ஒரே வாக்காளர் அடையாள எண் வழங்கப்படுவதால், போலி வாக்காளர்கள் இருப்பதாக அர்த்தம் இல்லை.” இந்நிலையில், திரிணாமுல் காங்., மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகாய், தனது எக்ஸ் போஸ்டில், ”தேர்தல் கமிஷன் அளித்துள்ள விளக்கம், உண்மையாகவே மூடிமறைக்கும் செயலாகும். இதில் தவறு இருப்பதாக ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம் அதை ஏற்க மறுக்கிறது. வாக்காளர் அடையாள எண்கள் மூன்று எழுத்துக்கள், ஏழு இலக்கங்கள் கொண்ட எண்ணெழுத்து வரிசையாகும். இதில் உள்ள மூன்று எழுத்துகள் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வெவ்வேறானவை என தேர்தல் கமிஷன் கையேட்டில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.
எனவே, வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், ஒரே மாநிலத்தில் இருந்தாலும், அவர்களது வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே முதல் மூன்று எழுத்துகள் இருப்பது சாத்தியமில்லை. மேற்கு வங்கத்தில் உள்ளதைப் போன்ற வாக்காளர் அடையாள எண்கள் ஹரியானா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன? மேலும், இந்த எண்கள் வாக்காளர் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், டூப்ளிகேட் எண்கள் வாக்குகள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இது பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்களை ஒடுக்கும் சதியை தெளிவாக காட்டுகிறது.
அங்கு பாஜக அல்லாத இடங்களில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள எண்களை பிற மாநிலங்களில் உள்ளவர்களிடம் கொடுத்து குறிவைத்து வருகின்றனர். பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்பட்டால், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை,” என குற்றம் சாட்டினார். * அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு போலி வாக்காளர் அடையாள அட்டை எண் சர்ச்சைக்கு மத்தியில், தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தலைமையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசுகையில், “அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதி அளவிலான தேர்தல் அலுவலர்கள் சட்டம் மற்றும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்களில் தெளிவாக வரையறுத்துள்ள பணி மற்றும் பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, சட்டப்படி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். தேர்தல் தொடர்பாக, பிரச்னை வாரியாக, இம்மாதம், 31-ம் தேதிக்குள், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,” என, வலியுறுத்தினார்.