திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோத்சவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திருப்பதி பிரம்மோற்சவம் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதற்காக பாடுபட்ட அனைத்து கோயில் அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோத்சவ விழா தொடங்கி அக்டோபர் 1 வரையிலான 8 நாட்களில், ரூ.5.8 லட்சம் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42 லட்சம் பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பக்தர்களுக்கு 28 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ. 25.12 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திருப்பதிக்கும் திருமலைக்கும் இடையே 4.4 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். பிரம்மோத்சவ விழாவின் போது முதல் முறையாக, 28 மாநிலங்களைச் சேர்ந்த 298 குழுக்கள் வந்து தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் மொத்தம் 6,976 பேர் பங்கேற்றுள்ளனர். கருட சேவைக்காக மட்டும், 780 கலைஞர்கள் 37 குழுக்களாகப் பிரிந்து தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த பிரம்மோத்சவ விழாவில் 65 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. 36 LED தொலைக்காட்சிகள் நிறுவப்பட்டு வாகன சேவைகள் ஒளிபரப்பப்பட்டன. 3,500 வாரி சேவகர்கள் சிறப்பாக பணியாற்றினர். 50 மருத்துவர்கள் மற்றும் 60 துணை மருத்துவ ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். மருத்துவ சேவைகளுக்காக 14 ஆம்புலன்ஸ்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 5,000 போலீசாரும், 1,800 கோயில் பாதுகாப்புப் பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.
சிறந்த வாகன நிறுத்துமிட வசதிகள் செய்யப்பட்டன. கருட சேவை நாளில் மட்டும், தெருக்களில் காத்திருந்த பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் விநியோகிக்கப்பட்டன. 2,800 துப்புரவுப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினர். இவ்வாறு பி.ஆர். நாயுடு கூறினார்.