கலிபோர்னியா: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எப்-35சி ரக போர் விமானம், கலிபோர்னியாவின் மத்திய பகுதியில் பயிற்சியின் போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் லீமோர் கடற்படை விமான தளத்துக்கு அருகே நடைபெற்றது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி, அவசர நிலையை உணர்ந்து நேரத்திலேயே வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளார்.

கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லீமோர் விமான தளம், அமெரிக்க கடற்படையின் முக்கியமான பயிற்சி மையங்களில் ஒன்றாகும். இங்கு, வி.எப் 125 ரப் ரைடர்ஸ் எனப்படும் பிரிவினர், எப்-35சி ரக போர் விமானங்களின் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிலே விழும் முன் விமானி வெளியே குதித்ததாலும், அவரது உயிர் தப்பியது ஒரு அதிசயமாகவும் அதிர்ஷ்டமாகவும் பார்க்கப்படுகிறது. விமானம் நொறுங்கியதும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விமான விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.