சென்னை:தமிழக சைபர் கிரைம் போலீஸ் பிரிவின் பெயரும் லோகோவும் பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் கிரைம் பிரிவு பொதுமக்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்பிரிவின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி சில நேர்மையற்ற நபர்கள் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய போலி கணக்குகள் நம்பகத்தன்மையை குறைக்கும் விதமாகவும், பொது மக்களை தவறாக வழிநடத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனால் டிஜிட்டல் பாதுகாப்பும் பாதிக்கப்படக்கூடும்.தற்போது 10 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 4 போலி ‘எக்ஸ்’ (முந்தைய ட்விட்டர்) கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வமான சமூக வலைதள கணக்கு @tncybercrimeoff என்பதுதான். இதற்குப் பிறகு உள்ள மற்ற கணக்குகளை நம்ப வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.