பெங்களூரு: இந்தியாவின் பிரபலமான பேஷன் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா, நேரடி அந்நிய முதலீட்டு (FDI) விதிகளை மீறி ரூ.1,654.35 கோடியளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை (ED) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மிந்த்ராவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் மீது, வெளிநாட்டு நாணய மேலாண்மை சட்டம் (FEMA) விதிகளை அடிப்படையாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிந்த்ரா நிறுவனம் ‘Wholesale Cash & Carry’ முறைப்படி வணிகம் செய்வதாகத் தெரிவித்தாலும், விசாரணையில் அவர்கள் Multi-Brand Retail Trading (MBRT) முறையில் செயல்பட்டது தெரியவந்தது. குறிப்பாக, மொத்த விற்பனை எனும் பெயரில் பெற்ற நிதியில் இருந்து ஒரு பகுதிக்கு மேல், மிந்த்ராவுடன் தொடர்புடைய M/s Vector E-Commerce Pvt. Ltd. நிறுவனத்திற்கு நேரடி விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நுகர்வோர்களுக்கு நேரடியாக பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
FDI விதிகளின்படி, மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களது மொத்த விற்பனையில் 25 சதவீதத்திற்கும் மேல் ஒரே ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது. ஆனால், மிந்த்ரா அந்த எல்லையை மீறியதோடு, இந்த விதிகளை திட்டமிட்ட முறையில் மீறி வருவதாக அமலாக்கத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1999ம் ஆண்டு வெளியான வெளிநாட்டு நாணய மேலாண்மை சட்டத்தின் பிரிவுகள் 6(3)(b) மற்றும் 16(3) உட்பட பல பிரிவுகளை மீறுவதாக இருக்கிறது.
இந்த விவகாரம் வெளிப்படையாக நேரடி அந்நிய முதலீட்டு நடைமுறைகள் மற்றும் வணிக ஒழுங்குமுறைகள் மீதான கேள்விகளை எழுப்புகிறது. இந்த வழக்கு மிந்த்ரா மட்டுமல்ல, இந்தியாவில் இயங்கும் பிற மாபெரும் இ-காமர்ஸ் நிறுவனங்களும் சோதனைக்கு உட்படலாம் என்பதற்கான அடையாளமாகக் காணப்படுகிறது.