புதுடில்லி: நம் நாட்டின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஏழு முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற முயற்சி செய்து வருகின்றன. அண்டை நாடுகளின் அச்சுறுத்தலின் சூழலில் எல்லைகளை பாதுகாக்கும் நோக்கில் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்திய படைகளில் இணிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த முயற்சியின் கீழ், டி.ஆர்.டி.ஓ. அமைப்பின் கீழ் நடுத்தர மற்றும் அதிநவீன போர் விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஒப்பந்தத்தை கைப்பற்றும் வாய்ப்பு பெறும் நிறுவனங்கள் திட்ட மதிப்பீடு, தொழில்நுட்பத் திறன் மற்றும் படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் ‘எல் அண்ட் டி., ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், அதானி டிபென்ஸ்’ ஆகிய நிறுவங்கள் முன்னணியில் உள்ளன.
இந்த விமானங்கள் இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின்கள் கொண்டிருக்கும், ஒரே இயக்குநர் மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உட்புறம் 1,500 கிலோ எடையிலான மற்றும் வெளிப்புறம் 5,500 கிலோ எடையிலான வெடிப்பொருட்களை எடுத்துச் செல்லும் வசதி, மேலும் 6,500 கிலோ எடையிலான எரிபொருள் ஏற்றும் திறன் கொண்டுள்ளன. இந்திய விமானப்படையில் 2035க்குள் 125 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இணைக்க 2 லட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையால், தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் சேரும் வாய்ப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நவீன போர் திறன்களை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரத்துடன் செயல்படுகிறது, இதன் மூலம் எல்லை பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நாட்டின் ராணுவ சக்தி மேம்படுத்தப்படும்.