புதுடெல்லி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் பயிர்கள், வாகனங்கள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. காப்பீடு செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை விரைந்து வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், கோரிக்கை செயல்முறைகளை எளிதாக்கவும், கோரிக்கைகளை விரைவாகத் தீர்க்கவும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு ஆதரவை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாலிசிதாரர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய நோடல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை விளம்பரப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் விஜயவாடாவில் நிலைமையை ஆய்வு செய்தனர். பின்னர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “விஜயவாடாவில் வரலாறு காணாத சூழல் நிலவுகிறது. குறுகிய காலத்தில் 400 மிமீ மழை பெய்துள்ளது. இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. தனது குழுவுடன் தொடர்ந்து பணியாற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி.
மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மனித உயிர் இழப்பு மிகக் குறைவு. தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் இங்கு பணியாற்றி வருகின்றன.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் இங்கு பணிபுரிகின்றனர்” என்றார். என குறிப்பிட்டுள்ளார். விஜயவாடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை கட்டுப்படுத்த புடமேரு ஆற்றில் ஏற்பட்ட உடைப்புகளை சரிசெய்ய ராணுவ குழுக்கள் வரவழைக்கப்பட்டு வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் உள்ள என்டிஆர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “சேதங்களை சரிசெய்ய ராணுவமும் வருகிறது. செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்,” என்றார்.
தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10,000 இழப்பீடு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார்.
கம்மம் ஊரக மண்டலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டார். கம்மம் ஊரக மண்டலத்தில் உள்ள கருணகிரி, ஜலகம்நகர், ராஜீவ் க்ருஹகல்பா மற்றும் பல கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட பைக்கில் சென்றனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ளிக்கிழமை மாலைக்குள் ரூ.10,000 இழப்பீடு அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.