புதுடில்லியில் நடந்த சாலை விபத்தில் நிதியமைச்சகத்தின் உதவி செயலாளர் நவ்ஜோத் சிங் உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

ரிங் ரோடு அருகே பயணித்தபோது, பிஎம்டபுள்யூ கார் ஒன்று நவ்ஜோத் சிங் சென்ற பைக்குடன் மோதியது. கடுமையாக காயமடைந்த அவர் மற்றும் மனைவி அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு ஜிடிபி நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நவ்ஜோத் சிங் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
இந்த விபத்தில் தொடர்பான பல கேள்விகள் எழுந்துள்ளன. அருகிலிருந்த மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பாமல், 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கு அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காரை ஒரு பெண் ஓட்டியதாகவும், அவரது கணவர் அருகே அமர்ந்து வந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கார் உரிமையாளர் குருகிராமில் வசிக்கும் தொழிலதிபர் என போலீசார் தெரிவித்துள்ளனர். காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டில்லியில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.