டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் நிதி திவாரி. அவர் ஆரம்பத்தில் வாரணாசி வணிக வரி துணை ஆணையராக பணிபுரிந்தார். அந்த பதவியில் பணிபுரியும் போது சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2013-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
நிதி திவாரி 2014-ல் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தார். தனது பணித் திறமையின் காரணமாக, நவம்பர் 2022-ல் பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில், அவர் வெளியுறவு அமைச்சகம், அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் ராஜஸ்தான் மாநில விவகாரங்களை திறம்பட கையாண்டார். 2023-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர்களில் நிதி திவாரியும் ஒருவர். இந்நிலையில், பிரதமரின் தனிச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவு கடந்த 29-ம் தேதி வெளியிடப்பட்டது. நிதி திவாரி உடனடியாக புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாடப் பணிகளை அவர் கவனிப்பார். குறிப்பாக, அவர் பங்கேற்கும் கூட்டங்கள், அவரது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய்வார். பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அரசின் பிற துறைகளுக்கு இடையே பாலமாக செயல்படுவார்.
மத்திய அரசின் கொள்கை முடிவுகளை வரையறுக்கும் உயர்நிலைக் குழுவில் நிதி திவாரி இடம் பெறுவார். அவை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அவர் கண்காணிப்பார். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதீஷ்சந்திர ஷா ஆகியோர் ஏற்கனவே பிரதமரின் தனிச் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் நிதி திவாரியும் இணைந்துள்ளார்.