ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காவல்துறை உள்பட 6 அரசு ஊழியர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அரசியலமைப்பின் 311(2)(சி) பிரிவை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்தார்.
விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் போதைப்பொருள் பயங்கரவாத வலையமைப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஜம்மு காஷ்மீர் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பணிநீக்கம் செயல்முறை தொடங்கியது. பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சிவில் சர்வீஸ் மற்றும் காவல்துறைக்குள் ஊடுருவுவதைத் தடுக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.